உறுப்பினர்கள்

Google+ Followers

Thursday, March 8, 2012

1. அர்ஜுனனின் விஷாத யோகம் ( ARJUNA'S DILEMMA )


(குழப்பமும் கலக்கமும் )
1.1   :திருதராஷ்டிரன் கேட்டது : சஞ்சயா ! தர்மபூமியாகிய குருக்ஷேத்திரத்தில்  போர் செய்வதற்காக கூடி நின்ற என் பிள்ளைகளும் பாண்டவர்களும் என்ன செய்தார்கள்.

1.2   :சஞ்சயன் சொன்னது : அணிவகுத்து நின்ற பாண்டவர் படையை பார்த்து விட்டு அரசனாகிய துரியோதனன் ஆச்சார்ய துரோணரை அணுகி கூறினான்.
1.3   :ஆசாரியரே ! உமது சீடனும் புத்திசாலியும் துருபதனின் மகனுமான த்ருஷ்டயும்னனால் அணிவகுக்கப்பட்ட பாண்டவர்களின் பெரிய படையை பாருங்கள்.
1.4-6 : சாத்யகி, விராடமன்னன், மகாரதனான துருபதன், திருஷ்டகேது, சேகிதானன், பலசாலியான காசி மன்னன், புருஜித், குந்தி போஜன், மனிதருள் சிறந்தவனான சிபியின் வம்சத்தில் வந்த மன்னன், பராகிரமசாலியான யுதாமன்யு, பலசாலியான உத்தமௌஜன், அபிமன்யு ,திரௌபதியின் பிள்ளைகள் என்று பீமணுக்கும் அர்ஜுனனுக்கும் இணையான பெரிய வில் வீரர்கள் பலர் பாண்டவர் படையில் உள்ளனர். இவர்கள் அனைவரும் மகாரதர்கள்.


1.7 : மனிதருள் சிறந்தவரே ! நமது படையில் சிறந்த தலைவர்களாக           உள்ளவர்களையும் உங்களுக்கு கூறுகிறேன். தெரிந்துகொள்ளுங்கள்.
1.8 - 9 : துரோனாச்சாரியராகிய நீங்கள், பீஷ்மர், கர்ணன், வெற்றி வீரரான கிருபர், அசுவத்தாமன், விகர்ணன், சொமத்தத்தனின் மகனான பூரிசிரவஸ், ஆகியோருடன் மேலும் பல வீரர்களும் உள்ளனர். பலவிதமான ஆயுதங்களை தாங்கிய இவர்கள் போரில் வல்லவர்கள், என்னக்காக உயிரையும் கொடுக்க துணிந்தவர்கள்.
1.10 : பீஷ்மர் காக்கின்ற நமது படை அளவற்று பறந்து கிடக்கிறது. பீமன் காக்கின்ற பாண்டவர்  படையோ அளவுக்கு உட்பட்டு நிற்கிறது.
1.11 : நீங்கள் எல்லோரும் உங்கள் அணிவகுப்புகளில் அவரவர் இடங்களில் நின்றுகொண்டு பீஷ்மரையே காக்க வேண்டும் .
1.12 : வல்லமை பொருந்தியவரும் குரு வம்சத்தில் மூத்தவரும்  பாட்டணுமான பீஷ்மர் துரியோதனனுக்கு உற்சாகம் ஊட்டுவதற்காக சிம்ம கர்ஜனை போன்ற உரத்த ஒலியை எழுப்பினார் .சங்கையும் ஊதினார் .
1.13  : அதன் பிறகு சங்குகளும் பேரிகைகளும் தப்பட்டைகளும் பறைகளும் கொம்புகளும் திடிரென்று முழங்கின. அது பேரொலியாக இருந்தது.
1.14 : பிறகு வெண்ணிற குதிரைகள் பூட்டிய பெரிய ரதத்தில் இருந்த கிருஷ்ணரும் அர்ஜுனனும் தெய்வீகமான சங்குகளை உரக்க ஊதினார்கள்.
1.15 : ஸ்ரீ கிருஷ்ணர் பாஞ்சஜன்யம் என்ற சங்கையும், அர்ஜுனன் தேவதத்தம் என்ற சங்கையும், பெரும் செயல் ஆற்றுபவனாகிய பீமன் பௌன்ட்ரம் என்ற பெரிய சங்கையும் ஊதினார்கள்.
1.16 : குந்திதேவியின் மகனான யுதிஷ்டிரர் அனந்த விஜயம் என்ற சங்கையும், நகுலன் சகாதேவனும் ஷுகோஷம், மணிபுஷ்பகம் என்ற சங்குகளையும் ஊதினார்கள்.
1.17 -18 : மன்னா ! சிறந்த வில்லாளியான காசி மன்னனும் மகாரதனான சிகண்டியும், திருஷ்டத்யும்னனும், விராடமன்னனும், வெல்ல முடியாதவனான சாத்யகியும், துருபத மன்னனும், திரௌபதியின் பிள்ளைகளும், தோல்வலிமை பொருந்திய அபிமன்யுவும் பிரகுவும் தனித்தனி சங்குகளை ஊதினார்கள்.
1.19 : ஆகாயத்திலும் பூமியிலும் எதிரொலித்த அந்த பேரொலி கௌரவர் கூட்டத்தின் இதயங்களை பிளந்தது.
1.20 : மன்னா ! அதன்பிறகு அனுமக்கொடியை உடையவனான அர்ஜுனன் போரை ஆரம்பிப்பதற்கு தயாராக நின்ற கௌரவர் அணியையும் ஆயுதங்கள் பாய தயாராக இருந்ததையும் கண்டு வில்லை உயர்த்தியபடி ஸ்ரீ கிருஷ்ணரிடம் இந்த வார்த்தைகளை கூறலானான்.
1.21 – 22 : அர்ஜுனன் சொன்னது : கிருஷ்ணா ! இரண்டு அணிகளுக்கும் இடையே எனது ரதத்தை நிறுத்து. யார் யாருடன் போர் செய்ய வேண்டும். போரிடுவதற்கு ஆவலுடன் வந்திருப்பவர்கள் யார்யார் என்பதை பார்கிறேன்

1.23 : தீய மனத்தினனான துரியோதனனுக்கு விருப்பமானதை செய்வதற்காக இங்கே போருக்காக கூடியிருப்பவர்களை நான் பார்க்க வேண்டும்.
1.24 – 25 : சஞ்சயன் சொன்னது : மன்னா ! அர்ஜுனன் இவ்வாறு கிருஷ்ணரிடம் கூறியதும் அவர் சிறந்த அந்த தேரை இரண்டு அணிகளுக்கு நடுவிலும் பீஷ்மர் துரோணர் மற்றும் எல்லா மன்னர்களும் எதிரிலும் நிறுத்தி, அர்ஜுனா , கூடியிருக்கின்ற இந்த கௌரவர்களை பார் என்று சொன்னார் .
1.26 : அர்ஜுனன் அங்கே இரண்டு அணிகளிலும் இருக்கின்ற தந்தையர், பாட்டன்மார், ஆச்சாரியார்கள், மாமன்மார், சகோதரர்கள், பிள்ளைகள், பேரங்கள், தோழர்கள் , மாமனார்கள், மற்றும் நண்பர்களை பார்த்தான்.
1.27 : உறவினர் அனைவரையும் நன்றாக பார்த்த அர்ஜுனன் ஆழ்ந்த இரக்கத்தின் வசப்பட்டு நொந்த மனத்துடன் பின்வருமாறு கூறினான்.
1.28 – 29 : அர்ஜுனன் சொன்னது : கிருஷ்ணா ! போரிடுவதற்காக கூடி நிற்கின்ற இந்த உறவினரை பார்த்து எனது அங்கங்கள் சோர்வடைகின்றன. வாய் வரள்கிறது. உடம்பு நடுங்குகிறது . மயிர்கூச்செறிகிறது.
1.30 : கிருஷ்ணா ! எனது கையிலுருந்து வில் நழுவுகிறது. உடம்பு எரிகிறது. நிற்க முடியவில்லை, மனம் குழம்புவது போல் இருக்கிறது. விபரீதமான சகுனங்களையும் காண்கின்றேன்.    
1.31 : கிருஷ்ணா ! போரில் உறவினரை கொல்வதில் எந்த நன்மையையும் நான் காணவில்லை. வெற்றி, அரசு, சுகம் இவை எதையும் நான் விரும்பவில்லை.
1.32 – 34 : கோவிந்தா ! யாருக்காக இந்த அரசும் சுக போகம்களும், விரும்பதக்கவையோ அந்த ஆச்சாரியார்கள், தந்தையர், பிள்ளைகள், பாட்டன்மார், மாமன்மார், மாமனார்கள், பேரங்கள், மைத்துனர்கள், சம்பந்திகள் எல்லோரும் தங்கள் உயிரையும் செல்வங்களையும் துறந்துவிட துணிந்து போர்களத்தில் நிற்கிறார்கள். அரசினாலும் சுகபோகங்களினாலும் எங்களுக்கு என்ன பயன்? உயிர் வாழ்ந்து தான் என்ன லாபம் ?
1.35 : கிருஷ்ணா ! நான் கொல்லபட்டலும் மூன்று உலகங்களையும் பெறுவதாக இருந்தாலும் கூட இவர்களை கொல்ல மாட்டேன். வெறும் அரசுக்காக இவர்களை கொள்வேனா ?
1.36 : கிருஷ்ணா ! திருதராஷ்டிரரின் பிள்ளைகளை கொல்வதால் நமக்கு என்ன இன்பம் கிடைக்க போகிறது ? அவர்கள் பெரும் பாவிகளே ஆனாலும் அவைகளை கொல்வதால் நமக்கு பாவமே வந்து சேரும்.
1.37 : மாதவா  ! உறவினராகிய துரியோதனன் முதலானோரை கொல்வது நமக்கு தகாது. உறவினரை கொன்றுவிட்டு நாம் எப்படி சுகத்தை அனுபவிக்க முடியும்.

1.38 -39 : கிருஷ்ணா ! பேராசையால் விவேகம் இழந்த மனத்தினராகிய இவர்கள் குல நாசத்தால் உண்டாகும் தீங்கையும், நண்பர்களை வஞ்சிப்பதால் விளைகின்ற பாதகத்தையும் தெரிந்துகொள்ளவில்லை. அதனை தெளிவாக அறிந்து இருக்கின்ற நாம் ஏன் அந்த பாவத்திலிருந்து காத்துகொள்ள கூடாது.
1.40 : குலம் நாசமடையும் போது, காலங்காலமாக இருந்து வருகின்ற குல தர்மங்கள் அழிகின்றன. தர்மம் குன்றுவதால் குலம் முழுவதையும் அதர்மம் சூழ்கிறது.
1.41 : விருஷ்ணி குலத்தில் உதித்தவனே கிருஷ்ணா ! அதர்மம் மிகுவால் குலமகளிர் கற்பை இழப்பார்கள். பெண்கள் கற்பை இழப்பதால் ஜாதி கலப்பு உண்டாகிறது.
1.42 : ஜாதி கலப்பினால், குலத்தை அழித்தவர்களுக்கும் குலதினருக்கும் நரகமே கிடைக்கிறது. அவர்களுடைய முன்னோர்கள் சாதம் மற்றும் தண்ணீரால் செய்யபடுகின்ற கிரியைகளை இழந்து விடுவார்கள்.
1.43 : குலத்தை அழித்தவர்களின் தீமைகளால் ஜாதிகலப்பு ஏற்படுகிறது. அதன் காரணமாக காலங்காலமாக இருந்து வருகின்ற  ஜாதி தர்மங்களும் குல தர்மங்களும் அழிகின்றன.
1.44 : கிருஷ்ணா ! குல தர்மங்களை இழந்தவர்கள் நரகத்தில் நீண்ட காலம் வாழ வேண்டும் என்று கேள்விபட்டு இருக்கிறேன்.
1.45 : அரசு போகத்தை அனுபவிப்பதற்கான  ஆசையால் உறவினரை கொல்லவும் முன் வந்தோம் நாம். இந்த மகாபாவத்தை செய்வதற்கு துணிந்தோமே !
1.46 : எதிர்க்காமலும் ஆயுதமில்லாமலும் இருக்கின்ற என்னை கையில் ஆயுதமுடைய துரியோதனன் முதலானோர் போரில் கொல்வார்களேயானால் கூட அது எனக்கு மிகுந்த நன்மை செய்வதே ஆகும்.

1.47 : சஞ்சயன் சொன்னது :இவ்வாறு சொல்லிவிட்டு அம்போடு கூடிய தனது வில்லை  எறிந்தான் அர்ஜுனன், துக்கத்தில் துடிக்கின்ற மனத்துடன் போர்களத்தில் தேர்த்தட்டில் உட்கார்ந்தான்.
விளக்கம்
பாண்டவர்களில் ஒருவரான அர்ஜுனன் யுத்தகளத்தை கண்ட உடன் பதற்றம் அடைந்தான். அந்த பதற்றத்திற்கு காரணம் அவனுக்கு இந்த உலகத்தின் (அல்லது ) பிரபஞ்சத்தின் பூரண உண்மை தெரியாததால் அவன் அவ்வாறு பதற்றத்துக்கு உள்ளானான். தர்மதிற்கான யுத்தத்தில் தனது உறவினர்களும் கொல்லபடுவார்களே என்று அஞ்சினான். இவ்வாறு அஞ்சி நடுங்கி கொண்டிருந்த அர்ஜுனனுக்கு பகவான் கிருஷ்ணர் பூரண உண்மையை கூறி அவனது புத்தியை விழித்தெழ செய்தார்.

ARJUNA'S DILEMMA, BHAGAVAD GITA CHAPTER 1

No comments:

Post a Comment