உறுப்பினர்கள்

Google+ Followers

Thursday, March 8, 2012

10 . விபூதி யோகம் ( MANIFESTATION OF THE ABSOLUTE )


(திருப்புகழ்) 


10.1 : பகவான் சொன்னது : பெருந்தோள் உடையவனே ! எனது மேலான வார்த்தைகளை கேள். கேட்பதில் மகிழ்ச்சி அடைகின்ற உனது நன்மைக்காக நான் மீண்டும் சொல்கிறேன்.
10.2 : எனது ஆரம்பத்தை தேவர்களும் மகரிஷிகளும் அறியவில்லை. ஏனெனில் நான் தேவர்களுக்கும் மகரிஷிகளுக்கும் எல்லாவகையிலும் முற்பட்டவன்.
10.3 : நான் பிறப்பற்றவன், ஆரம்பமற்றவன், உலகின் தலைவன் என்று யார் அறிகிறானோ அவன் மனமயக்கம் இல்லாதவன் . அவன் எல்லா பாவங்களிலிருந்தும் விடுபடுகிறான்.


10.4 – 5  : புத்தி, ஞானம், விழிப்புணர்வு, பொறாமை, உண்மை, புலனடக்கம், மனக்கட்டுப்பாடு, சுகம், துக்கம், பிறப்பு, இறப்பு, பயம், பயமின்மை, அகிம்சை, சமநிலை, திருப்தி, தவம், தானம், புகழ்ச்சி, இகழ்ச்சி என்ற உயிரினங்களில் கானபடுகின்ற பல்வேறு தன்மைகள் என்னிடமிருந்தே உண்டாகின்றன.
10.6 : ஏழு மகரிஷிகளும், அவ்வாறே பண்டைய நான்கு மனுக்களும் எனது சங்கல்பத்திலிருந்து எனது இயல்புடன் பிறந்தார்கள். அவர்களிடமிருந்து உலகில் உயிரினங்கள் உண்டாயின.
10.7 : என்னுடைய இந்த மகிமையையும் யோகத்தையும் யார் உள்ளபடி அறிகிறானோ, அவன் யோகத்தில் உறுதியாக நிலைபெருகிறான். இதில் சந்தேகம் இல்லை.
10.8 : நான் எல்லாவற்றின் பிறப்பிடம், என்னிலிருந்தே அனைத்தும் செயல்பட தொடங்குகின்றன. இவ்வாறு அறிந்து, சான்றோர்கள் பக்தியுடன் என்னை வழிபடுகிறார்கள்.
10.9 : அவர்கள் என்னிடம் மனத்தை வைத்து, உயிரை எனக்கு உரியதாக்கி, ஒருவருக்கொருவர் என்னை பற்றி விளக்கம் தந்தும் எப்போதும் பேசியும் மன நிறைவு கொள்கிறார்கள். மகிழ்ச்சி அடைகிறார்கள்.
10.10 : எப்போதும் யோகத்தில் இருப்பவர்களும், அன்புடன் என்னை வழிபடுபவர்களும் ஆகிய அவர்களுக்கு நான் புத்தி யோகத்தை வழங்குகிறேன். அதன் மூலம் அவர்கள் என்னை வந்தடைகிறார்கள்.
10.11 : அவர்களிடம் கொண்ட கருணையால் நான் அவர்களின் உள்ளத்தில் வீற்றிருந்து, அறியாமை காரணமாக தோன்றிய இருளை பிரகாசிக்கின்ற ஞான தீபத்தினால் அகற்றுகிறேன்.
10.12 – 13  : அர்ஜுனன் சொன்னது : நீ மேலான பிரம்மம், உயர்ந்த இருப்பிடம், ஒப்பற்ற புனித பொருள், எல்லா ரிஷிகளும், தேவ ரிஷியான நாரதரும், அஷிதர், தேவலர், வியாசர் போன்ற முனிவர்களும் உன்னை நிலையானவன், ஒளிமயமான இறைவன், முழுமுதற்கடவுள், பிறப்பற்றவன், எங்கும் நிறைந்தவன் என்றெல்லாம் போற்றுகிறார்கள். நீயும் அவ்வாறே சொல்கிறாய்.
10.14 : கேசவா ! எனக்கு எதை சொல்கிறாயோ, அவை எல்லாம் உண்மை என்று கருதுகிறேன். பகவானே ! உனது உண்மை இயல்பை தேவர்களும் அறியவில்லை, அசுரர்களும் அறியவில்லை.
10.15 : புருஷோத்தமா ! உயிர்களை படைத்தவனே, உயிர்களின் தலைவனே, தேவாதிதேவனே, உலகை ஆள்பவனே, உன்னை நீயே அறிவாய், உன்னால் மட்டுமே உன்னை அறிய முடியும். நீ அதை அறிகிறாய்.
10.16 : எந்த மகிமைகளால் நீ உலகங்களை வியாப்பித்து, நிற்கிறாயோ, தெய்வீகமான உனது அந்த மகிமைகளை எனக்கு முற்றிலுமாக சொல்ல வேண்டும்.
10.17 : யோகி, நான் எப்போதும் தியானிப்பதன் மூலம் எப்படி உன்னை அறிவது? பகவானே ! உன்னை எந்தெந்த பாவனைகளில் தியானிக்க முடியும்?
10.18 : ஜனார்த்தனா ! உனது யோகத்தையும் மகிமையையும் மீண்டும் எனக்கு விரிவாக சொல்ல வேண்டும், ஏனெனில் அந்த அமுத மொழிகளை கேட்பதில் எனக்கு திருப்தியே வருவதில்லை .
10.19 : பகவான் சொன்னது : குருகுல பெருவீரனே ! நல்லது, எனது தெய்வீக மகிமைகளில் முக்கியமானவற்றை மட்டும் உனக்கு சொல்கிறேன். ஏனெனில் எனது மகிமைகளுக்கு எல்லையே இல்லை.
10.20 : தூக்கத்தை வென்றவனே ! எல்லா உயிர்களின் இதயத்தில் இருக்கின்ற ஆன்மா நான். உயிர்களின் ஆரம்பமும் நடுவும் முடிவும் நானே.

10.21 : நான் ஆதித்தர்களில் விஷ்ணு, ஒளிர்பவற்றில் கிரணங்களை உடைய சூரியன், மருத்துக்களில்  மரிசியாக இருக்கிறேன். நட்சத்திரங்களில் நான் சந்திரன்.
10.22 : நான் வேதங்களில் சாம வேதம், தேவர்களில் இந்திரன், புலன்களில் மனம், உயிர்களில் உணர்வு.
10.23 : நான் ருத்திரர்களில் சங்கரன், யட்சர்கள் மற்றும் ரட்சஷர்களுள் செல்வத்திற்கு அதிபதியான குபேரனாகவும், வசுக்களில் அக்னியாகவும், சிகரமுள்ள மலைகளில் மேருவாகவும் நான் இருக்கிறேன்.
10.24 : அர்ஜுனா ! புரோகிதர்களில் முக்கியமானவரான பிருகஸ்பதி நான். சேனாதிபதிகளில் கந்தனாகவும், நீர் நிலைகளில் கடலாகவும் நான் இருக்கிறேன்.
10.25 : நான் மகரிஷிகளில் பிருகு, மந்திரங்களுள் ஓரெழுத்து மந்திரமாகிய ஓங்காரம், வேல்விகளுள் ஜப வேள்வி, அசையாதவற்றில் இமயமலை.
10.26 : நான் மரங்களில் அரச மரம், தேவ ரிஷிகளில் நாரதர், கந்தர்வர்களில் சித்ரரதன், சித்தர்களில் கபில முனிவன்.
10.27 : நான் குதிரைகளில் பாற்கடலில் இருந்து தோன்றிய உச்சைசிரவசம், யானைகளில் ஐராவதம், மனிதர்களில் அரசன்.
10.28 : நான் ஆயுதங்களில் வஜ்ஜுராயுதம், பசுக்களில் காமதேனு, நான் உயிர்களை பிறப்பிக்கின்ற மன்மதனாக இருக்கின்றேன். சர்ப்பங்களில் வாசுகியாக இருக்கின்றேன்.
10.29 : நாகங்களில் நான் அனந்தநாக இருக்கிறேன். ஜல தேவதைகளில் வருணன் நான். முன்னோர்களில் அறியமானாக இருக்கிறேன். ஒடுக்குபவர்களில் எமன் நான்.
10.30 : நான் அசுரர்களில் பிரகலாதன். கணிப்பவர்களில் காலம். மிருகங்களில் சிங்கம், பறவைகளில் கருடன்.

10.31 : நான் சஞ்சரிப்பவற்றுள் காற்று, ஆயுதம் தாங்கியவர்களில் நான் ராமன், மீன்களில் மகர மீன், நதிகளில் கங்கை.
10.32 : அர்ஜுனா ! படைப்பிற்கு ஆரம்பமும் நடுவும் முடிவும் நானே. வித்யைகளில் ஆத்ம வித்யை  நான். வாதிடுபவர்களின் வாதம் நான்.
10.33 : நான் எழுத்துக்களில் அகரம், கூட்டு சொற்களில் இருசொற்கூட்டு, முடிவற்ற காலம் நானே. எங்கும் முகமுள்ளவனாக இருந்துகொண்டு நான் அனைவருடைய கர்மபலனை பகிர்ந்தளிக்கிறேன்.
10.34 : அனைத்தையும் அழிக்கின்ற மரணம் நான். செல்வந்தர்களின் செல்வம் நான். பெண்களின் சுய கௌரவம், அக அழகு, இனிய பேச்சு, துல்லிய நினைவு, கூறிய அறிவு, உறுதிப்பாடு, பொறுமை ஆகிய பண்புகளாக இருக்கிறேன்.
10.35 : நான் ஷாமங்களில் பிருஹத் ஷாமம், சந்தஷ்களில் காயத்ரி, மாதங்களில் மார்கழி, பருவங்களில் வசந்தகாலம்.
10.36 : நான் வஞ்சகர்களின் சூதாட்டம், தேஜஷ்விகளின் தேஜஸ், வெற்றியாக முயற்சியாக இருப்பவன் நான். சாத்வீகர்களின் சத்வ குணம் நானே .
10.37 :  நான் விருஷ்ணிகளில் வாசுதேவன், பாண்டவர்களில் அர்ஜுனன், முனிவர்களில் வியாசர், கவிஞர்களில் சுக்ராச்சரியார்.
10.38 : தண்டிப்பவர்களிடம் நான் தண்டனையாக இருக்கிறேன், வெற்றியை விரும்புபவர்களிடம் நீதியாக இருக்கிறேன், நான் ரகசியங்களில் மௌனம். ஞானிகளின் ஞானமாக இருப்பது நானே.
10.39 : அர்ஜுனா ! எல்லா உயிர்களுக்கும் எது விதையாகிறதோ, அது நான், அசைவதும் அசையாததுமான பொருள் எது இருக்கிறதோ அது என்னை தவிர வேறில்லை.
10.40 : எதிரிகளை வாட்டுபவனே ! எனது தெய்வீக மகிமைகளுக்கு முடிவு இல்லை. கோடிகாட்டுவது போல் இதுவரை சிலவற்றை சொன்னேன்.
10.41 : மிக மேலான மகிமையுடனும், ஐசுவரியத்துடனும் சோர்வற்ற  முயற்சியுடனும் எவையெல்லாம் உள்ளனவோ அவை எல்லாம் எனது தேஜசின் ஒரு பகுதியால் உண்டானது என அறிந்துகொள்.
10.42 : அர்ஜுனா ! இவ்வாறு பலவற்றை அறிந்துகொல்வதால் உனக்கு ஆவதென்ன ? எனது ஓர் அம்சத்தால் இந்த பிரபஞ்சம் முழுவதையுமே தாங்குகிறேன்.

விளக்கம்
எல்லா வகையிலும் இறைவன் முற்பட்டவன். தேவர்களுக்கும் ரிஷிகளுக்கும் முற்பட்டவர்.கடவுளை பிறப்பற்றவர் இறபற்றவர் எப்போதும் எங்கும் நிறைந்து இருப்பவர் என்பதை முழுமையாக உணர்பவன் எல்லா பாவங்களிலும் இருந்து விடுபடுவான்.மனிதனிடம் இருகின்ற அணைத்து தன்மைகளும் ( புத்தி, ஞானம், பொறாமை ) இறைவனிடமிருந்தே தோன்றுகின்றது. இவ்வாறு இறை குணத்துடன் ஏழு மகரிஷிகளும் நான்கு மனுக்களும் பிறந்தார்கள்.இவர்களிடமிருந்து உலகத்தில் உயிர்கள் உண்டாகின்றன. அனைத்தின் பிறப்பிடம் இறைவன். அணைத்து செயல்களும் இறைவனிடமிருந்து உண்டாகிறது. உண்மையை உள்ளபடி அறிந்தவர்களுக்கு இறைவனே வழியை காண்பிக்கிறார். அணைத்து உயிர்களின் இதயத்தில் இருகின்ற ஆன்மா இறைவன். 
MANIFESTATION OF THE ABSOLUTE , BHAGAVAD GITA CHAPTER 10

No comments:

Post a Comment