உறுப்பினர்கள்

Google+ Followers

Thursday, March 8, 2012

16 . தெய்வாசூர ஸம்பத் விபாக யோகம் (DIVINE AND DEMONIC QUALITIES )( மனிதனின் இரண்டு பக்கங்கள் )


16.1 - 3 : அர்ஜுனா ! பயமின்மை, மனத்தூய்மை, ஞானத்திலும், யோகத்திலும் நிலைபெற்றிருத்தல், தானம், புலனடக்கம், வழிபாடு, சாஸ்திரங்களை படித்தல், தவம், நேர்மை, தீங்கு செய்யாமை, உண்மை, கோபமின்மை, தியாகம், அமைதி, கோள்சொல்லாமை, உயிர்களிடம் இரக்கம், பிறரது பொருளை விரும்பாமை, மென்மை, நாணம், உறுதியான மனம், தைரியம், பொறுமை, திடசங்கல்பம், தூய்மை, வஞ்சகமின்மை, கர்வமின்மை ஆகியவை தெய்வீக இயல்புடன் பிறந்தவனுக்கு உரியவை ஆகின்றன.
16.4 : அர்ஜுனா ! அசுர இயல்புடன் பிறந்தவனுக்கு பகட்டு, இறுமாப்பு, தற்பெருமை, கோபம், கடுமை, அறியாமை ஆகியவை பண்புகளாக அமைகின்றன.
16.5 : தெய்வீக இயல்பு மோட்சத்தை தருவது, அசுர இயல்பு பந்தத்தை தருவது என்று கருதபடுகிறது. அர்ஜுனா ! வருந்தாதே. நீ தெய்வீக இயல்புடன் பிறந்திருக்கிறாய்.
16.6 : அர்ஜுனா ! தெய்வீக இயல்பினர், அசுர இயல்பினர் என்று இந்த உலகில் இரண்டு வகையினர் உள்ளனர். தெய்வீக இயல்பு பற்றி விரிவாக கூறினேன். இனி அசுர இயல்பு பற்றி கூறுகிறேன் கேள்.
16.7 : எதை செய்ய வேண்டும், எதை செய்ய கூடாது என்பது  அசுர இயல்பினருக்கு தெரியாது. அவர்களிடம் தூய்மை இல்லை. நல்லொழுக்கம் இல்லை. உண்மையும் இல்லை.
16.8 : உலகம் அடிப்படை நியதிகள் எதுவுமின்றி இயங்குவது, தர்மத்தில் நிலை பெறாதது. கடவுள் இல்லாதது. ஆண் – பெண் உறவினால் தோன்றியது. காமத்தை காரணமாக கொண்டது என்பதை தவிர வேறு என்ன ? என்று அசுர இயல்பினர் சொல்கின்றனர்.
16.9 : தங்கள் வாழ்க்கையை வீணடித்து கொண்ட, கொடுஞ்செயல் புரிகின்ற இந்த அற்ப புத்தியினர், ( முந்திய சுலோகத்தில் கூறிய ) கருத்தை பிடித்துகொண்டு உலகின் எதிரிகளாக அதன் அழிவிற்காகவே தோன்றியுள்ளனர்.
16.10 : நிறைவு செய்ய முடியாததான காமவசபட்டு, மதிமயங்கி, ஆடம்பரமும் தற்பெருமையும் கர்வமும் கொண்டு கெட்ட எண்ணங்களுடனும் தீய நோக்கங்களுடனும் அவர்கள் செயல்படுகிறார்கள்.
16.11 - 12 : அளவிட முடியாததும் மரணத்தை முடிவாக கொண்டதுமான ( ஆசைகளின் வசப்பட்டு, அவை நிறைவேறாததால் ) கவலையில் ஆழ்ந்து, காம நுகர்ச்சியையே அனைத்திலும் மேலானதாக கருதி, எல்லாம் இவ்வளவு தான் என்று தீர்மானித்து, நூற்றுகணக்கான ஆசைகளால் கட்டுப்பட்டு, காமம் கோபம் இவற்றின் வசப்பட்டு, காமபோகத்திற்காக நியாயமற்ற வழியில் செல்வக் குவியல்களை தேட முயல்கின்றனர்.
16.13 : இது, இன்று என்னால் அடையப்பட்டது, இந்த ஆசை இனி நிறைவேறப் பெரும். இது எனக்கு உள்ளது. இந்த செல்வமும் வந்து சேரும் என்றெல்லாம் அசுர இயல்பினர் மனகோட்டை கட்டுகின்றனர்.
16.14 : என்னால் இந்த எதிரி கொல்லப்பட்டான், மற்றவர்களையும் கொல்வேன் என்று இறுமாப்பு கொள்கிறார்கள். நானே தலைவன் நான் போகங்களை அனுபவிக்கிறேன். நான் நினைத்தது நிறைவேற பெற்றவன். பலசாலி, சுகமாயிருப்பவன் என்று ஆணவம் கொள்கிறார்கள்.
16.15 : அறியாமையில் மதிமயங்கிய அவர்கள், நான் பணக்காரன், உயர்குலத்தவன், எனக்கு சமமானவன் யார் ? நான் யோகம் செய்வேன், தானம் செய்வேன், மகிழ்ச்சியில் மிதப்பேன் என்றெல்லாம் பிதற்றுகிறார்கள்.
16.16 : பல்வேறு சிந்தனைகளால் குழப்பம் அடைந்த, மோகவலையில் சிக்கிய, காம போகங்களில் ஆழ்ந்த அவர்கள் பாழ் நகரில் வீழ்கிறார்கள்.
16.17 : தற்புகழ்ச்சி உடைய, பணிவற்ற, செல்வ செருக்கும் ஆணவமும் கொண்ட அவர்கள் விதிப்படி அல்லாமல் வெறும் ஆடம்பரதிற்க்காக யாகம் முதலியவற்றை செய்கிறார்கள்.
16.18 : ஆணவம், வலிமை, செருக்கு, காமம், கோபம் போன்றவற்றின் வசப்பட்டவர்கள் தங்களிலும் பிறரிலும் இருக்கின்ற என்னை வெறுத்து அவமதிக்கின்றனர்.
16.19 : வெறுக்கத்தக்க, கொடிய, மனிதர்களுள் கடைப்பட்ட, இழிந்த அவர்களை பிறப்பு – இறப்பு என்று சுழல்கின்ற சம்சார உலகில் அசுர இயல்புடைய பிறவிகளிலேயே நான் தொடர்ந்து தள்ளுகிறேன்.
16.20 : அர்ஜுனா ! அந்த மூடர்கள் பல பிறவிகளில் அசுர இயல்புடன் பிறந்து, என்னை அடையாமல் மேலும் மேலும் கீழான கதியை அடைகிறார்கள்.
16.21 : காமம், கோபம், பேராசை என்ற மூன்றும் நரகத்தின் வாசல்கள். இவை மனிதனை அழிக்கின்றன. ஆதலால் இந்த மூன்றையும் விட்டுவிட வேண்டும்.
16.22 :  அர்ஜுனா ! இந்த மூன்று நரக வாசல்களிலிருந்தும் விடுபட்ட மனிதன் தனக்கு நன்மை செய்கிறான். மேலான நிலையை அடைகிறான்.
16.23 : யார் சாஸ்திர விதியை புறக்கணித்து, காமத்தால் தூண்டபெற்று செயல்படுகிறானோ அவன் இறை நிலையையோ மோட்சத்தையோ அடைவதில்லை.
16.24 : செய்ய தக்கது எது, செய்ய தகாதது எது என்பதை நிச்ச்சயிப்பதில் சாஸ்திரமே உனக்கு பிரமாணம் ஆகிறது. சாஸ்திரம் சொல்வதை அறிந்து இந்த உலகத்தில் நீ செயல்பட கடமைபட்டிருக்கிறாய். 
BHAGAVAD GITA CHAPTER 16

No comments:

Post a Comment