உறுப்பினர்கள்

Google+ Followers

Thursday, March 8, 2012

2 . சாங்கிய யோகம் / புத்தி யோகம் ( TRANSCENDENTAL KNOWLEDGE )( உண்மையறிவை துனைகொள் )  2.1 : சஞ்சயன் சொன்னது : இரக்கத்தால் நெகிழ்ந்து, கண்ணீர் நிறைந்ததால் பார்வை மறைந்து, சோகத்தில் மூழ்கியிருந்த அர்ஜுனனிடம் கிருஷ்ணர் இவ்வாறு சொல்ல தொடங்கினார்.

2.2 : ஸ்ரீ பகவான் சொன்னது : அர்ஜுனா ! மேன்மக்களுக்கு போருந்தாததும், சொர்க்க பேற்றை தடுப்பதும், இகழ்ச்சிக்குரியதுமான மனசோர்வு இக்கட்டான இந்த நிலையில் எங்கிருந்து உன்னை வந்தடைந்தது ?
2.3 : அர்ஜுனா ! பேடி தனத்திற்கு இடம் தராதே. இது உன்னக்கு பொருந்தாது. எதிரியை வாட்டுபவனே ! அற்பமான இந்த மன தளர்ச்சியை விட்டுவிட்டு எழுந்திரு.
2.4 : அர்ஜுனன் சொன்னது : எதிரிகளை கொள்பவனே ! மது என்ற அரக்கனை கொன்றவனே ! வழிப்படதக்கவர்களான பீஷ்மரையும் துரோனரையும் எதிர்த்து நான் எப்படி பாணங்களை விடுவேன்.


2.5 : மேன்மை பொருந்திய ஆச்சாரியர்களை கொள்வதை விட பிச்சையேற்று வாழ்வது கூட நிச்சயமாக நல்லது.இந்த ஆச்சாரியர்கள் ஆசை வசபட்டவர்களாக இருந்தாலும் இவர்களை கொன்று இவர்களது ரத்தத்தில் தோய்ந்த சுகபோகங்களை இவர்களது இடத்திலேயே இருந்து கொண்டு எப்படி அனுபவிப்பது ?
2.6 : யாரை கொன்றபின் நாம் உயிர்வாழ விரும்ப மாட்டோமோ அந்த கௌரவர்கள் நம் முன்னால் நிற்கின்றனர். நாம் இவர்களை வெல்வது, இவர்கள் நம்மை வெல்வது இதில் எது நமக்கு சிறந்தது என்பது தெரியவில்லையே !
2.7 : சிறுமை என்ற கேட்டினால் நிலை தடுமாறி உள்ளேன். எது தர்மம் என்பதை அறியாமல் குழம்பி நிற்கிறேன். எனக்கு எது நிச்சயமான நன்மை தருமோ அதை சொல்வாய். நான் உனது சீடன், உன்னை சரணடைகிறேன். எனக்கு அறிவுரை சொல்வாய்.
2.8 : எதிரிகள் இல்லாததும் வளமானதுமான அரசை பெற்றாலும் தேவர்களின் தலைமை பதவியே எனக்கு கிடைத்தாலும் புலன்களை வாட்டுகின்ற எனது கவலையை அது போக்குமென்று தோணவில்லை.
2.9 : சஞ்சயன் சொன்னது : இவ்வாறு கூறிய பிறகு எதிரிகளை எரிப்பவனும் தூக்கத்தை வென்றவனுமாகிய அர்ஜுனன் புலன்களை வென்றவராகிய ஸ்ரீ கிருஷ்ணரிடம் நான் போரிட மாட்டேன் என்று சொல்லிவிட்டு மெளனமாக இருந்துவிட்டான்.
2.10 : மன்னா ! இரண்டு படைகளுக்கும் இடையில் தவித்து கொண்டு இருந்த அர்ஜுனனிடம் ஸ்ரீ கிருஷ்ணர் சற்றே சிரிப்பவர் போல் கூறலானார்.
2.11 : ஸ்ரீ பகவான் சொன்னது : நீ துக்கப்பட கூடாதவர்களுக்காக  துக்கபடுகிறாய். அதே வேளையில் பண்டிதர்களை போல் பேசவும் செய்கிறாய். இறந்தவர்களை பற்றியோ இருப்பவர்களை பற்றியோ  அறிவாளிகள் கவலைபடுவதில்லை.
2.12 : நான் ஒரு போதும் இல்லாமல் இல்லை. நீயும் இந்த மன்னர்களும் கூட இல்லாமல் இருந்ததில்லை. நாம் யாரும் இனி இல்லாமல் போய்விடுவோம் என்பதும் இல்லை.
2.13 : இந்த உடம்பு எப்படி இளமையும் வாலிபமும் மூப்பும் அடைகிறதோ அப்படியே அதில் உறைகின்ற ஆன்மா வேறு உடலையும் பெறுகிறது.அறிவாளிகள் அதை கண்டு குழம்புவதில்லை.
2.14 : குந்தியின் மகனே ! புலன்களுக்கும் பொருட்களுக்கும் உள்ள தொடர்பு குளிர்-சூடு, சுகம்-துக்கம் ஆகியவற்றை தருவனவாகவே இருக்கும். ஆனால் அவை தோன்றி மறைபவை, நிலையற்றவை. அர்ஜுனா ! அவற்றை பொருத்துக்கொள்.
2.15 : ஆண் சிறந்தவனே ! இவை ( சுகம்-துக்கம் போன்ற இரட்டைகள் ) யாரை பதற்றத்திற்கு உள்ளக்குவதில்லையோ, யார் சுக துக்கங்களை சமமாக கொள்பவனோ, யார் விவேகியோ அவன் நிச்சயமாக மரணமில்லா பெருநிலைக்கு தகுதி வாய்ந்தவன்  ஆகிறான்.
2.16 : உண்மையற்றது இருக்காது. உண்மையானது இல்லாமல் போகாது இந்த கருத்தை மகான்கள் உணர்ந்து இருகிறார்கள்.
2.17 : எதனால் இந்த உலகம் அனைத்தும் வியாப்பிக்கபட்டுள்ளதோ அது அழிவற்றது.என்பதை அறிந்துகொள். மாறாக அந்த ஒன்றை யாராலும் அழிக்க முடியாது.
2.18 : உடம்பில் உள்ள ஆன்மா என்றென்றும் இருப்பது, அழிவற்றது, அறியமுடியாதது ஆனால் உடம்புகள் முடிவு உடையது என்று சொல்லபடுகிறது. எனவே அர்ஜுனா போர் செய்.

2.19 : ஆன்மாவை கொலையாளி என்றும் கொலை செய்யப்பட்டது என்றும் கருதுபவர்கள் உண்மையை அறியாதவர்கள். ஆன்மா கொல்லபடுவதுமில்லை கொல்வதுமில்லை.
2.20 : இந்த ஆன்மா ஒரு போதும் பிறந்ததில்லை, இறந்ததுமில்லை, உண்டாகி மீண்டும் இல்லாமல் போவதும் இல்லை. இது பிறப்பற்றது இறப்பற்றது நிலையானது பழமையானது. ஆதலால் உடம்பு கொல்லப்பட்டாலும் ஆன்மா கொள்ளப்படுவதில்லை.
2.21 : அர்ஜுனா ! இந்த ஆன்மாவை அழிவற்றதாக என்றென்றும் இருப்பதாக ,பிறப்பற்றதாக, குறைவற்றதாக யார் அறிகிறானோ அவன் யாரை எப்படி கொல்வான் ? யாரை எப்படி கொல்ல செய்வான்.
2.22 : பழைய உடைகளை களைந்துவிட்டு புதிய உடைகளை மனிதன் அணிந்துகொள்வது போல் ஆன்மா பழைய உடம்புகளை விட்டுவிட்டு புதிய உடம்புகளை ஏற்று கொள்கிறது.
2.23 : ஆன்மாவை ஆயுதங்கள் வெட்டாது. தீ எரிக்காது. தண்ணீர் நனைக்காது, காற்று உலர்த்தாது.
2.24 : ஆன்மாவை வெட்ட முடியாது,எரிக்க முடியாது.நனைக்க முடியாது. உலர்த்தவும் முடியாது. இது எங்கும் நிறைந்தது, என்றென்றும் இருப்பது, நிலையானது, அசைவற்றது, புராதனமானது .
2.25 : ஆன்மா காண முடியாதது. சிந்தனைக்கு எட்டாதது, மாறுபடாதது என்று சொல்லபடுகிறது. இதனை அறிந்துக்கொள் . துக்கம் உனக்கு தகாதது.
2.26 : பெரும்தோல் உடையவனே ! மனிதன் பிறப்பும் இறப்பும் உடையவன் என்று ஒருவேளை நினைப்பாயானால் அப்போதும் வருந்துவது பொருந்தாது.
2.27 : பிறந்தவனுக்கு மரணம் நிச்சயம், இறந்தவன் பிறப்பது உருதி, பரிகாரம் காண முடியாத இந்த விஷயத்தில் நீ கவலைப்படுவது பெருந்தாது.
2.28 : அர்ஜுனா ! உயிரினங்கள் ஆரம்பத்தில் தென்படுவதில்லை, இடையில்  தென்படுகின்றன. இறுதியில் தென்படாமல் போகின்றன. இவை பற்றி வருத்தம் எதற்கு ?
2.29 : இந்த ஆன்மாவை ஒருவன் ஆச்சரியமானது போல் பார்க்கின்றான், மற்றொருவன் ஆச்சரியமானது போல் பேசுகின்றான், இன்னொருவன் ஆச்சரியமானது போல் கேட்கிறான். கேட்டும் யாரும் இதனை அறிவதில்லை.
2.30 : அர்ஜுனா ! எல்லா உடம்பிலும் இருக்கின்ற இந்த ஆன்மாவை ஒரு போதும் கொல்ல முடியாது.எனவே எந்த உயிரைபற்றியும் நீ வருந்துவது பொருந்தாது.
2.31 : சொந்த கடமையை பார்த்தாலும் உன் தயக்கம் தகாததாகவே உள்ளது. ஏனெனில் நியாயத்திற்கான போரை விட க்ஷத்திரியனுக்கு வேறு  சிறப்பு ஏதும் இல்லை.
2.32 : அர்ஜுனா ! தற்செயலாக நேர்ந்துள்ளதும் திறந்து இருக்கின்ற சொர்க்கவாசல் போன்றதுமான அந்த போரை புன்னியசாளிகலான க்ஷத்திரியர்கள் அடைகிறார்கள். 
2.33 : நியாதிற்க்கான இந்த போரில் ஈடுபடாமல் போனால் நீ கடமையிலிருந்து தவரியவனாகி புகழை இழந்து பாவத்தை அடைவாய்.
2.34 : மக்கள் உன்னை எப்போதும் இகழ்ந்து பேசுவார்கள்.பெருமைகுரிய  ஒருவனுக்கு அவமானம் என்பது மரணத்தை விட இழிவானதாகும்.
2.35 : பயத்தினால் போரிலிருந்து நீ பின்வாங்கியதாக பெரிய வீரர்கள் நினைப்பார்கள். உன்னை புகழ்ந்த அவர்களே இகழவும் செய்வார்கள் .
2.36  : உன்னுடைய எதிரிகளும் உனது திறமையை இகழ்ந்து சொல்லத்தகாத அவதூறுகளை சொல்வார்கள் .அதைவிட பெரும் துன்பம் எது உள்ளது.
2.37 : குந்தியின் மகனே ! கொல்லபட்டால் சொர்கத்தை அடைவாய் ,வென்றால் நாட்டை அனுபவிப்பாய் ,அதனால் போரிடுவதற்கு உறுதியுடன் எழுந்திரு.
2.38 : சுக துக்கங்களையும், லாப நஷ்டங்களையும் வெற்றி தோல்விகளையும் சமமாக கொண்டு போருக்காக ஆயுத்தபடு .இவ்வாறு செய்தால் பாவம் உன்னை சேராது.
2.39 : அர்ஜுனா ! ஆன்மா பற்றி உனக்கு சொன்னேன். இனி யோகம் பற்றி கூறுகிறேன் கேள். அதை பின்பற்றினால் நீ கர்ம தலையிலிருந்து விடுபடுவாய்.
2.40 : யோக வாழ்வில் முயற்சி வீனாதல் கிடையாது. குற்றம் கிடையாது. இதில் சிறிதளவு முயற்சி கூட பெரும் பயத்திலிருந்து காப்பாற்றுகிறது.
2.41 : குரு வம்சத்தில் பிறந்தவனே ! இந்த யோக வாழ்வில் ஒன்றேயான நிச்சயமான புத்தி  உள்ளது. ஆனால் உறுதி அற்றவர்களின் நோக்கங்கள் எண்ணற்றவை, பலமுகபட்டவை.
2.42 – 44 : அர்ஜுனா ! விவேகமற்றவர்கள், வேதங்களை பற்றிய வாதங்களில் மகிழ்பவர்கள், உலக சுகங்களை தவிர வேறு இல்லை என்று வாதிடுபவர்கள், காமம் நிறைந்தவர்கள், சொர்க்க சுகத்தை நாடுபவர்கள் –இத்தகையோரின் வார்த்தைகள் வினைபயனின் காரணமாக புதிய பிறவியை தருவது, சுகத்தையும் அந்தஸ்தையும் அடைவதற்கான பல்வேறு கிரியைகள் நிறைத்தது, சொல் ஜாலங்கள் மிக்கது, சுகத்திலும் அந்தஸ்திலும் பற்று கொள்பவர்களுக்கு உறுதியான புத்தி உண்டாவதில்லை.
2.45 : அர்ஜுனா ! வேதங்கள் முக்குண மயமான உலகை  பற்றியவை, நீ மூன்று குணங்களையும் கடந்தவனாக, இருமைகளை கடந்தவனாக ,எப்போதும் சமநிலையில் இருப்பவனாக, தேடவும் பாதுகாக்கவும்     செய்யாதவனாக, உன்னிலேயே நிலை நிற்பவனாக ஆவாய்.
2.46 : எங்கும் வெள்ளபெருக்கு நிறைந்திருக்கையில் ஏறி நீரால் எவ்வளவு பயன் இருக்குமோ அவ்வளவு பயன் தான் உண்மையை அறிந்த சான்றோனுக்கு வேதங்களில் இருக்கும்.
2.47 : வேலை செய்வதில் மட்டுமே உனக்கு உரிமை உண்டு, பலன்களில் ஒருபோதும் இல்லை. வினைபயனை உண்டாக்குபவன் ஆகிவிடாதே. வேலை செய்யாமல் இருக்கவும் விரும்பாதே.
2.48 : பொருளாசையை வென்றவனே ! யோகத்தில் நிலை பெற்றவனாக, பற்றை விட்டு, வெற்றி தோல்விகளில் சமமாக இருந்துகொண்டு கடமைகளை செய். சமநிலையில் நிற்பதே யோகம் என்று சொல்லபடுகிறது.
2.49 : அர்ஜுனா ! புத்தி யோகத்தை விட மிக சாதாரண செயல் நிச்சயமாக மிகவும் கீழானது. எனவே புத்தியில் சரணடை. பலனை நாடுபவர்கள் கீழானவர்கள்.
2.50 : புத்தி யோகத்தில் நிலை பெற்றவன் இந்த உலகில் புண்ணிய பாவங்கள் இரண்டையும் நீக்குகிறான். எனவே அந்த யோக நிலையை அடைவாய். யோகம் என்பது செயல்களை திறம்பட செய்வதாகும்.
2.51 : புத்தியில் நிலை பெற்ற மகான்கள் செயலினால் உண்டாகின்ற பலனை விட்டுவிட்டு, அதனால் பிறவி தலையிலிருந்து விடுபட்டு துன்பமற்ற நிலையை நிச்சயமாக அடைகிறார்கள்.
2.52 : உனது அறிவு எப்போது மனமயக்கமாகிய குற்றத்தை கடக்குமோ அப்போது கேட்க வேண்டியதிலும் கேட்டவற்றிலும் உனது பற்று விலகும்.
2.53 : பலவற்றை கேட்டு கலக்கம் அடைந்துள்ள உனது அறிவு எப்போது நிலையாக அசையாமல் உன்னில்  நிற்குமோ அப்போது புத்தி யோகத்தை அடைவாய்.
2.54 : அர்ஜுனன் கேட்டது : கிருஷ்ணா , மனம் ஒருமுக பட்ட ஒருவனின் அடையாளம் என்ன ? புத்தி விழிபுற்றவனான அவன் எப்படி பேசுவான் ? எப்படி இருப்பான் ? எப்படி நடந்து கொள்வான்.
2.55 : ஸ்ரீ பகவான் சொன்னது : அர்ஜுனா ! எப்போது ஒருவன் தன்னாலேயே தன்னில் திருப்தி கொண்டு, அதனால் மனத்தின் எல்லா ஆசைகளையும்  விடுகிறானோ அப்போது அவன் புத்தி யோகி என்று சொல்லபடுகிறது.
2.56 : யாருடைய மனம் துக்கத்தில் துவல்வதில்லையோ, சுகத்தை நாடுவதில்லையோ, பற்று பயம் கோபம் ஆகியவற்றை விட்டவன் யாரோ அவன் புத்தி விழிப்புற்ற முனிவன் என்று கூறபடுகின்றான். 
2.57 : யார் எதிலும் பற்றில்லாதவனோ, சுகத்தில் மகிழ்வதில்லையோ, துக்கத்தை வெருப்பதில்லையோ, அவனது புத்தி நிலைபெறுகிறது.
2.58  : ஆமை தனது அவயங்களை உள்ளே இழுத்து கொள்வதுபோல் எல்லா பொருட்களிளுருந்தும், புலன்களை உள்ளே இழுத்து கொள்கின்ற திறமை எப்போது ஒருவனுக்கு வாய்க்குமோ அப்போது அவனது புத்தி நிலைபெறுகிறது.
2.59 : புலன்கள் பொருட்களை நாடாமல் தடுப்பவனுக்கு அனுபவங்கள் இல்லை. ஆனாலும் அவற்றின் வசீகரம் விலகுவதில்லை. ஆன்மாவை கண்ட பிறகே அந்த வசீகரம் விலகுகிறது.
2.60 : அர்ஜுனா ! வேகம் மிக்கவையான புலன்கள் விவேகமும் விடாமுயற்சியும் உடைய மனிதனின் மனத்தை கூட வலுகட்டாயமாக இழுத்து அலைக்கழிக்கிறது.
2.61 : எல்லா புலன்களையும் வசபடுத்தி, என்னில் நிலைபெற்று, மன உறுதியுடன் இருக்க வேண்டும். யாருடைய புலன்கள் வசப்பட்டு இருக்கின்றனவோ அவனது புத்தி விழிப்புற்றதாகிறது.
2.62 – 63 : பொருட்களை நினைப்பதால் அவற்றின் மீது பற்று ஏற்படுகிறது. பற்று ஆசையாக மாறுகிறது. ஆசையால் கோபம், கோபத்தினால் மனமயக்கம், மனமயக்கதால் நினைவு நழுவுதல், நினைவு நழுவுவதால் பகுத்தறிவின் சீர்கேடு, பகுத்தறிவின் சீர்கேட்டால் மனிதன் அழிகிறான்.
2.64  : விருப்பு, வெறுப்பு நீங்கியதும், தனக்கு வசப்பட்டதுமான புலன்களால் பொருட்களை அனுபவிக்கின்ற மனபக்குவம் பெற்றவன் மன தெளிவு பெறுகிறான்.
2.65 : மனத்தெளிவு பெற்றவனிடம் இருந்து எல்லா துக்கங்களும் விலகுகின்றன. ஏனெனில் மனத்தெளிவு பெற்றவனின் புத்தி விரைவில் விழுப்புறுகிறது.
2.66 : ஒருமைபடாத மனத்தை உடையவனின் புத்தி விழிப்புறாது. புத்தி விழித்தெழாத ஒருவனால் தியானம் செய்ய முடியாது. தியானம் செய்யதவனுக்கு மன அமைதி கிடையாது. மன அமைதி இல்லாதவனுக்கு இன்பம் எங்கே ?
2.67 : தண்ணீரில் மிதக்கின்ற படகை காற்று இழுத்து அலைக்கழிப்பது போல், உலகியல் சுகங்களில் ஈடுபடுகின்ற புலன்களை தொடர்ந்து செல்லுமாறு மனத்தை விட்டால்  அது விவேகத்தை அழிக்கிறது.
2.68 : தோல் வலிமையில் சிறந்தவனே ! யாருடைய புலன்கள் எல்லா வழிகளிலும் பொருட்களில் இருந்து விளக்கபட்டுள்ளனவோ அவனுடைய புத்தி விழிபுற்றதாகிறது.
2.69 : எல்லா உயிர்களுக்கும் எது இரவாக உள்ளதோ, தன்னை வென்றவன் அதில் விழிப்புடன் இருக்கிறான், உயிர்கள் எதில் விழிப்புடன் உள்ளனவோ, விழிப்புணர்வு பெற்ற முனிவனுக்கு அது இரவாக உள்ளது.
2.70 : முற்றிலும் நிறைந்தது, அமைதியாக இருக்கின்ற கடலை நதிநீர் எப்படி அடைகிறதோ, அப்படியே யாரை எல்லா ஆசைகளும் அடைகின்றனவோ அவன் மன அமைதி பெறுகின்றான். ஆசைவசப்பட்டவன் அமைதி அடைவதில்லை.
2.71 : யார் எல்லா ஆசைகளையும் விட்டு, பற்றின்றி, நான் எனது என்ற எண்ணங்கள் இன்றி வாழ்கிறானோ அவன் அமைதியை அடைகிறான்.
2.72 : அர்ஜுனா ! இது தான் இறைநிலை, இதனை அடைந்தவன் மனமயக்கதில் ஆழ்வதில்லை. அவன் இந்த நிலையில் நிலைத்து இருந்து  மரணகாலத்திலாவது ஆனந்தமயமான இறைவனை அடைகிறான்.
விளக்கம்
மனிதன் ( அல்லது ) ஒரு ஜீவன் ( அல்லது ) ஒரு உயிரி என்பது ஜட உடல் மற்றும் ஆன்மா இவை இரண்டின் கூட்டமைப்பே மனிதன் அல்லது உயிரி. இதில் மனிதன் இறந்து விட்டால் மனித உடல் மட்டுமே அழியும் அதில் உள்ளே இருக்கும் ஆன்மா அழியாது.
நிர்ணயிக்கப்பட்ட கர்மத்தை ( அல்லது ) வேலையை ஒருவன் செய்தே ஆகவேண்டும். வேலை ( அல்லது ) கடமை செய்வதற்கு மிகவும் கடினமாக இருக்கிறது என்பதால் அதை செய்யாமல் விட்டால் அவனை பாவம் வந்து சேரும். மேலும் அனைத்து கொடுக்கப்பட்ட வேலையை / கடமையை செய்ய வெறுப்போ விருப்போ கொள்ள கூடாது. அவ்வாறு விருப்பு வெறுப்பு கொள்ளாமல் இருந்தால் மனம் அமைதியாக இருக்கும். மனம் அமைதியாக இருந்தால் தான் புத்தி விழித்தெழும். புத்தி விழித்தெழுந்தால் நாம் கொஞ்சம் கொஞ்சமாக இறைவனை நோக்கி முன்னேறலாம்.
ஆசை, காமம், கோபம் இவற்றை முற்றிலும் விட வேண்டும். இவை மூன்றும் தான் மனிதனை அங்கும் இங்கும் இழுத்து அலைக்கழிக்கிறது. ஆகையால் இந்த மூன்றையும் விட்டு மனத்தை அமைதியாக நிலையாக வைத்து தனது கடமைகளை விறுப்பு வெறுப்பு இல்லாமல் செய்ய வேண்டும்.
ஒரு வேலையை செய்து விட்ட பிறகு அந்த வேலையின் முடிவு தோல்வியாக இருந்தாலும் அதற்காக மிகுந்த வருத்தம் கொள்ள வேண்டாம். ஏனெனில் அந்த வேலையை அவன் எந்த வித விருப்பு வெறுப்பு இல்லாமல் முழுமையாக செய்து இருக்கிறான். அதன் பலனில் / முடிவில் அவனின் அதிகாரம் இல்லை. இதை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்.
“கடமையை கண்ணும்கருத்துமாக செய்வதற்கு மட்டுமே நமக்கு அதிகாரம் இருக்கிறது. அதன் பலனில் எந்த வித அதிகாரமும் இல்லை.”
இன்பம் – துன்பம், சூடு – குளிர், கோடை – மழை, சுகம் – துக்கம் இவை இயற்கையிலிருந்து தோன்றுகின்றன. இவற்றால் மனம் பாதிக்காமல் பார்த்து கொள்ள வேண்டும். அதாவது இவை நிலையானவை அல்ல. தோன்றி மறைபவை.
இன்பம் வரும் போது மிகுந்த இன்பத்தை அடைவதும் துன்பம் வரும்போது மிகுந்த துன்பத்தில் ஆழ்ந்து விடுவதும் நல்ல கதிக்கு ஒரு மனிதனை கொண்டு செல்லாது. இங்கே ஏற்படுகின்ற இன்பமும் துன்பமும் தற்காலிகமானவை. அவற்றில் ஆழ்ந்துவிட கூடாது. இன்பத்தையும் துன்பத்தையும் சமமாக எடுத்து கொள்ள வேண்டும். ஏனெனில் இவை இயற்கையிலிருந்து தோன்றுபவை.
இறைவனை அடைந்த பிறகு கிடைக்கும் இன்பமே நிரந்தரமானது. அந்த நிரந்தரமான இன்பத்தை அடைய இறைவனை நோக்கி முன்னேற வேண்டும்.

TRANSCENDENTAL KNOWLEDGE, BHAGAVAD GITA CHAPTER 2

No comments:

Post a Comment