உறுப்பினர்கள்

Google+ Followers

Thursday, March 8, 2012

9 . ராஜ வித்யா ராஜகுஹ்ய யோகம் ( SUPREME KNOWLEDGE AND THE BIG MYSTERY )
( பக்தியே ரகசியம் )


9.1 : பகவான் சொன்னது : எதை அறிந்தால் தடைகளிலிருந்து விடுபடுவாயோ, விஞ்ஜானத்துடன் கூடியதும் அதிரகசியமானதுமான அந்த பாதையை தவறான பார்வையில்லாதவனான உனக்கு சொல்கிறேன்.
9.2 : இந்த பாதை வித்தைகளுள் தலை சிறந்தது, அதிரகசியமானது, புனிதபடுத்துவதில் தலை சிறந்தது, கண்கூடாக உணரத்தக்கது, தர்மத்துடன் கூடியது, செய்வதற்கு இன்பமானது, அழிவற்றது.
9.3 : எதிரிகளை வாட்டுபவனே ! இந்த தர்மத்தில் நம்பிக்கையில்லாதவர்கள் என்னை அடையாமல் மரணத்துடன் கூடிய உலக வாழ்க்கையில் உழல்கிறான்.
9.4 : புலன்களுக்கு தென்படாத என்னால் இந்த உலகம் அனைத்தும் வியப்பிக்கபட்டுள்ளது. எல்லா உயிர்களும் என்னிடம் இருக்கின்றன, நானோ அவற்றில் இல்லை.


9.5 : உயிரினங்கள் என்னில் இல்லை, என் தெய்வீக ஆற்றலை பார்—உயிரினங்களை நானே படைக்கிறேன், தாங்குகிறேன், ஆனால் நான் அவற்றில் இல்லை.
9.6 :எங்கும் நிறைந்ததும் ஆற்றல் வாய்ந்ததுமான காற்று எப்படி எப்போதும் ஆகாசத்தில் இருக்கிறதோ, அப்படியே எல்லா உயிர்களும் என்னிடம் உள்ளன என்பதை தெரிந்துகொள்.
9.7 : அர்ஜுனா ! கல்ப முடிவில் எல்லா உயிர்களும் என் சக்தியில் ஒடுங்குகின்றன. கல்ப ஆரம்பத்தில் மீண்டும் அவற்றை நான் தோற்றுவிக்கிறேன்.
9.8 : என் சக்தியை பரிணமிக்க செய்து, தன் வசமில்லாமல் எனது சக்தியின் வசத்தில் இருக்கின்ற எல்லா உயிரினங்களையும் மீண்டும் மீண்டும் தோற்றுவிக்கிறேன்.
9.9 : அர்ஜுனா ! கர்மங்களில் பற்றற்றவனாகவும், பொருட்படுத்தாதவனை போலவும் இருக்கின்ற என்னை அந்த கர்மங்கள் கட்டுபடுத்துவது இல்லை.
9.10 : அர்ஜுனா ! என்னால் வழிநடத்தபெற்று, எனது அந்த சக்தி, அசைவதும், அசையாததும் நிறைந்த உலகை படைக்கிறது, இவ்வாறு உலகம் செயல்படுகிறது .
9.11 : உயிர்களின் தலைவனான எனது மேலான இயல்பை அறியாத மூடர்கள் மனித உடலை எடுத்துள்ளவன் என்று என்னை அவமதிக்கிறார்கள்.
9.12 : அசுரர் மற்றும் அரக்கர்களின் இயல்புகளான மனமயக்கமும் விவேகமின்மையும் நிறைந்த இந்த கோணல் அறிவினர் நம்பிக்கைகள் வீண், செயல்களும் வீணே.
9.13 : அர்ஜுனா ! தெய்வீக இயல்பினரான மகான்கள், உயிர்களின் பிறப்பிடமும் , அழிவற்றவனும் ஆகிய என்னை அறிந்து வேறு எதிலும் மனத்தை செலுத்தாமல் என்னை வழிபடுகிறார்கள்.
9.14 : என்னை எப்போதும் போற்றியும், உறுதியான ஈடுபாட்டுடன் முயற்சி செய்தும், பக்தியுடன் வணங்கியும், எப்போதும் ஒருமுகப்பட்ட மனத்தினராக இருந்தும் அவர்கள் வழிபடுகிறார்கள்.
9.15 : ஞான வேள்வியில் வழிபடுகின்ற மற்றவர்களும் ஒன்றாக, பலவாக, எங்கும் நிறைந்தவனாக பல விதங்களில் என்னையே வழிபடுகிறார்கள்.
9.16 : நானே கிரது, நானே வேள்வி, நானே ஷ்வதா, நானே ஔஷதம், நானே மந்திரம், நானே நெய், நானே அக்னி, வேள்வி செய்தலாகிய கர்மமும் நானே.
9.17 : இந்த உலகின் தந்தையாக, தாயாக, பாட்டனாக, வினைபயனை அளிப்பவனாக, அறியத்தக்கவனாக, புனிதபடுத்துபவனாக, பிரணவ வடிவினனாக, ரிக், சாம, யஜுர், வேதங்களாக நானே இருக்கிறேன்.
9.18 : புகலிடம், வளர்ப்பவன், தலைவன், சாட்சி, இருப்பிடம், தஞ்சம், நண்பன், பிறப்பிடம், ஒதுங்குமிடம், தங்குமிடம், செல்வம், அழிவற்ற விதை, அனைத்தும் நானே.
9.19 : அர்ஜுனா ! நான் வெப்பம் தருகிறேன், நானே மழை பெய்ய செய்கிறேன், தடுக்கவும் செய்கிறேன், மரணமின்மையும், மரணமும், இருப்பதும், இல்லாததும் நானே.
9.20 : வேதங்களை அறிந்தவர்களும், சோமபானம் அறிந்தியவர்களும், பாவம் நீங்க பெற்றவர்களும், யாகங்களால் என்னை வழிபாட்டு சொர்கத்தை பிராத்திக்கிறார்கள். அவர்கள் நற்செயல்களின் விளைவாக இந்திர லோகத்தை அடைந்து சொர்கத்தில் மேலான தேவ போகங்களை அனுபவிக்கிறார்கள்.
9.21 : அவர்கள் பரந்த அந்த சொர்க்கத்தை அனுபவித்து, புண்ணிய பலன் தீர்ந்ததும் பூமியை அடைகிறார்கள். வேதங்கள் கூறுகின்ற கர்மங்களை பின்பற்றுபவர்கள் உலகியல் நாட்டம் உடையவர்களாக இவ்வாறு வரவும் போகவும் செய்கிறார்கள் .
9.22: வேறு எதையும் நினைக்காமல் என்னையே நினைத்து யார் எங்கும் என்னையே வழிபடுகிறார்களோ, மாறாத உறுதிகொண்ட அந்த பக்தர்களின் யோக க்ஷேமத்தை நான் தாங்குகின்றேன்.
9.23 : குந்தியின் மகனே ! எந்த பக்தர்கள் மற்ற தெய்வங்களையும் நம்பிக்கையுடன் வழிபடுகிறார்களோ, அவர்களும் உண்மையை சரியாக அறியாமல் என்னையே வழிபடுகிறார்கள் .  
9.24 : எல்லா யாகங்களுக்கும் நானே தலைவன். யாகங்களை அனுபவிப்பவனும் நானே. ஆனால் அவர்கள் என்னை உள்ளபடி அறிவதில்லை. அதனால் மேலான பலனை இழக்கிறார்கள்.
9.25 : தேவர்களை வழிபடுபவர்கள் தேவர்களை அடைகிறார்கள். இறந்த முன்னோரை வழிபடுபவர்கள் முன்னோரை அடைகிறார்கள். பூதங்களை வழிபடுபவர்கள் பூதங்களை அடைகிறார்கள். என்னை வழிபடுபவர்கள் என்னை அடைகிறார்கள்.
9.26 : இலை, பூ, பழம், நீர், போன்றவற்றை யார் எனக்கு பக்தியுடன் அளிக்கிறானோ, தூய மனத்தை உடைய அவன் பக்தியுடன் அளிப்பதை நான் ஏற்று கொள்கிறேன்.   
9.27 : குந்தியின் மகனே ! எதை செய்கிறாயோ, எதை உண்கிறாயோ, எதை ஹோமம் செய்கிறாயோ, எதை தானம் செய்கிறாயோ, எந்த தவம் செய்கிறாயோ, அதை எனக்கு அர்பனமாக செய்.
9.28 : இவ்வாறு, நல்ல மற்றும் தீய பலன்களை தருகின்ற கர்மபந்தங்களிலிருந்து விடுபடுவாய். சந்நியாச யோகத்தில் மனத்தை நிலைபெற செய்து , வினைகளிலிருந்து விடுபட்டு என்னை அடைவாய்.
9.29 : நான் எல்லா உயிர்களிடமும் சமமாக இருக்கிறேன். எனக்கு பகைவனும் இல்லை, நண்பனும் இல்லை, யார் என்னை பக்தியுடன் போற்றுகிரார்களோ, அவர்கள் என்னிடம் உள்ளார்கள் , நானும் அவர்களிடம் உள்ளேன்.
9.30 : மிக கொடியவனும் கூட வேறு எதையும் நினைக்காமல் என்னையே வழிபடுவானானால் அவன் நல்லவன் என்றே கருதப்பட வேண்டும். ஏனெனில் அவன் சரியான நோக்கத்தை உடையவன்.
9.31 : அவன் விரைவில் தர்மத்தில் நிலை பெற்றவன் ஆகிறான். நிலைத்த அமைதியை பெறுகிறான். குந்தியின் மகனே ! எனது பக்தன் அழிவதில்லை என்பது உறுதி.
9.32 : அர்ஜுனா ! யார் இழிந்த பிறவிகளோ அவர்களும், பெண்கள், வைசியர் மற்றும் சூத்திரர்கள் என்னை சார்ந்து இருந்து நிச்சயமாக மேலான கதியை அடைகிறார்கள்.
9.33 : புண்ணியசாலிகளும், பக்தர்களுமாகிய பிராமணர்களும், ராஜரிஷிகளும் அடைய மாட்டார்களா என்ன ! நிலையற்றதும் இன்பமற்றதுமாகிய இந்த உலகை அடைந்த நீ என்னை வழிபடு.
9.34 : மனத்தை என்னிடம் வைத்தவனாக, எனது பக்தனாக, என்னை வழிபடுபவனாக ஆவாய். என்னை வணங்கு, இவ்வாறு என்னை மேலான கதியாக கொண்டு, மன உறுதியுடன் வழிபட்டால் என்னையே அடைவாய்.  
விளக்கம்
காற்று எவ்வாறு இந்த உலகம் முழுவதும் பரவியிருக்கிறதோ அவ்வாறே பகவான் எங்கும் நிறைந்து இருக்கிறார். இது புலன்களுக்கு ( கண்களுக்கு ) தென்படாது. அனைத்து உயிர்களும் இறைவனிடத்திலேயே இருக்கின்றன. அசையும் பொருள் அசையா பொருள் அனைத்தும் இறைவனாலேயே தொற்றுவிக்கபடுகிறது. அனைத்து செயல்களும் இயற்க்கை செய்கிறது. சொர்க்க வாழ்க்கை வாழ வேண்டும் என்று வேதங்களில் கூறப்பட்ட செயல்களை செய்தும் வழிபாடு செய்தும் கொண்டு இருப்பவர்களை இறைவனே சொர்க்கத்திற்கு எடுத்து செல்கிறார். அவர்களுடைய புண்ணியங்கள் தீர்ந்த பிறகு மீண்டும் அவர்கள் இந்த பூமியில் உயிரினமாக பிறப்பார்கள். இறைவனை அடைந்தால் மட்டுமே பிறவியில் இருந்து விடுபட முடியும்.
பக்தியுடனும் தூய மனத்துடனும் பக்தன் அளிக்கும் எந்த சிறிய பொருளையும் இறைவன் அன்பாக ஏற்றுகொள்வார். இப்படிபட்ட இறைவன் அனைத்து உயிரையும் சமமாக காண்கிறார். அதேபோல் எந்த மனிதன் அனைத்து உயிரினங்களையும் சமமாக காண்கின்றானோ அவன் இறைவனுக்கு மிகவும் பிரியமானவன். எல்லா வேலைகளையும் செய்யலாம் ஆனால் அதனால் விளையும் பலனில் விருப்பு வெறுப்பு கொள்ளாமல் இறைவனுக்கு அர்பணித்து விட்டு இருந்தால் எந்த பாவத்திற்கும் ஆளாகாமல் இந்த பிறவியிலேயே முக்தி அடையலாம். அதாவது மீண்டும் பிறவா நிலையை அடையலாம்.  

SUPREME KNOWLEDGE AND THE BIG MYSTERY, BHAGAVAD GITA CHAPTER 9,         

No comments:

Post a Comment